அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் புதிய கட்டப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி விவகாரம் தற்போதைக்கு நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இடைத்தரகத்துவத்துடன் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போதைய முக்கியக் கவனம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதிலும் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அணுசக்தி விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை" என்றார்.
மேலும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்திய அவர், "எதிரி நாடுகளின் ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளுக்கு ஒருபோதும் நாங்கள் கட்டுப்படப் போவதில்லை. ஈரானின் தேசிய நலன்களையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான மிகச்சிறந்த தற்காப்பு மற்றும் ராஜதந்திர வழிமுறைகளையே எங்களது அரசு தொடர்ந்து பின்பற்றும்" என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிபந்தனைகள் மற்றும் பொருளாதார தடைகளுக்கு மத்தியில், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களில் உடனடியாக எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பதை செய்தித் தொடர்பாளரின் இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

0 Comments