நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் திட்டம்



இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நியூயார்க் நகரில் கைது செய்வதற்கான சட்டரீதியான அதிகாரங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியின் நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் வரவுள்ள நிலையில், இந்த பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது போர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்மையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசிய மேயர் ஜோஹ்ரான் மம்தானி, "பிரதமர் நெதன்யாகு ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றக் கூண்டில் இருக்க வேண்டியவர். அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர் குற்றவாளி. அவரது கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் போரினால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாக உலகெங்கிலும் உள்ள பலர் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும், நெதன்யாகு நியூயார்க் வரும்போது அவரை நியூயார்க் நகர காவல்துறையை (NYPD) கொண்டு கைது செய்ய மேயருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளதா என்பது குறித்து நியூயார்க் சட்டத் துறையுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க் நகர சட்டங்கள் எவற்றை அனுமதிக்கிறதோ, அதன்படி தங்களது நிர்வாகம் செயல்படும் என்றும், எனினும் இதற்காக புதிய சட்டங்கள் எதையும் தாங்கள் இயற்றப் போவதில்லை என்றும் மம்தானி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அரசியல் மற்றும் தூதரக ரீதியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் மேயரின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஐநாவுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானோன் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். மேயர் மம்தானியின் இந்த மிரட்டல்களால் இஸ்ரேல் பிரதமர் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும், திட்டமிட்டபடி அவர் ஐநா பொதுச்சபையில் உரையாற்றி இஸ்ரேலின் உரிமைகளை உலகிற்கு எடுத்துரைப்பார் என்றும் டானோன் கூறினார். மேலும், நியூயார்க் நகரை சரியாக நிர்வகிக்கத் தவறிய மேயர் மம்தானிதான் உண்மையில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உறுப்பு நாடல்ல என்பதால், உள்ளூர் நிர்வாகங்கள் இத்தகைய சர்வதேச வாரண்டுகளை செயல்படுத்துவதில் பல சட்ட சிக்கல்கள் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்தின் (Federal Government) தலையீடுகள் இருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், நியூயார்க் மேயரின் இந்த அறிவிப்பு தற்போதைய உலக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Post a Comment

0 Comments