காசா முனையில் அக்டோபர் 2023 முதல் தொடரும் கடுமையான தாக்குதல்கள் மனித குல வரலாற்றில் பெரும் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில மாதங்களாக அங்குள்ள குழந்தைகளை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள புள்ளிவிவரங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. காசாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய இந்த மோதல்களில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது ஒரு பெற்றோரை இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தனது புதிய அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, குறைந்தது 60,737 குழந்தைகள் தங்களது பெற்றோர் எவரையாவது இழந்துள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக 52,095 குழந்தைகள் தங்களது தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களது தாயையும் இழந்துள்ளனர். மிக மோசமான சூழ்நிலையில், சுமார் 2,713 குழந்தைகள் தங்களது தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்து முற்றிலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். போரின் கோரத்தாண்டவம் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாகச் சிதைத்துள்ளது என்பதை இந்தத் தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
மேலும், இந்தத் தாக்குதல்களில் பல முழுமையான குடும்பங்கள் வரலாற்றிலிருந்தே காணாமல் போயுள்ளன. குடிமைப் பதிவேட்டின்படி, 2,276 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,858 பேர் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளனர், அதாவது அந்த குடும்பங்களின் வம்சாவழியே முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, அக்டோபர் 2023 முதல் இதுவரை 73,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதையும் மீறி இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் கொடூரத் தாக்குதல்களால், போர்நிறுத்தத்திற்குப் பின்னும் 1,100 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், காசாவில் நடக்கும் வன்முறைகள் தற்காலிகமாகக் கூட முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இதனால் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விவகாரத்தில் உடனடித் தலையீடு செய்து நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

0 Comments