காசா நோக்கிச் சென்ற 'குளோபல் சுமுத்' (Global Sumud) மனிதநேய உதவிக் கப்பல் குழுவின் ஆர்வலர்களை அவமதிக்கும் வகையில் நடத்தியதாக எழுந்த சர்வதேசக் கண்டனங்களைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு பிரான்ஸ் அரசு உடனடியாகத் தடை விதித்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோல் பரோட் (Jean-Noël Barrot) தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இம்முடிவை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்றைய தினம் முதல் இட்டாமர் பென்-க்விர் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது. குளோபல் சுமுத் கப்பல் குழுவில் பயணித்த பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய குடிமக்களை அவர் நடத்திய விவரிக்க முடியாத விதம் மற்றும் அநாகரிகமான நடவடிக்கைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது"என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பென்-க்விரிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியமும் (EU) பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
காசாவிற்கான கடல்வழி முற்றுகையை உடைத்து நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற குளோபல் சுமுத் கப்பல் குழுவை இஸ்ரேலியப் படைகள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இடைமறித்துக் கைப்பற்றின. அப்போது தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ஆர்வலர்களின் கைகள் கட்டப்பட்டு, அவர்கள் மண்டியிட்டு அமர வைக்கப்பட்டிருந்த போது, அமைச்சர் பென்-க்விர் அவர்களைக் கேலி செய்யும் வகையிலும், இஸ்ரேலியக் கொடியை அசைத்து அச்சுறுத்தும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு பெருமிதம் கொண்டார்.
அமைச்சரின் இந்த மனிதநேயமற்ற செயலுக்குப் பிரான்ஸ் மட்டுமன்றி, போலந்து (5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது), இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சொந்த நாட்டு குடிமக்கள் மற்றொரு நாட்டின் அரசு அதிகாரியால் அச்சுறுத்தப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியாது என பிரான்ஸ் அரசு இந்த அதிரடித் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

0 Comments