ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா யதார்த்தமான முடிவுகளை எடுக்கத் தவறினால், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் எவ்வித சமரசமும் இருக்காது என ஈரான் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த ஈரானிய உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கையில், சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது ஈரான் தரப்பில் மிகவும் நியாயமான மற்றும் ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பிரச்சினைகளை யதார்த்தமான முறையில் அணுகி முடிவெடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அமெரிக்காவின் கைகளிலேயே இருப்பதாகவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
தன்னுடைய போர் வியூகங்களில் அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு தோல்வியைத் தழுவியதோ, அதேபோன்று தற்போதைய ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் அமெரிக்கா தவறான கணக்கீடுகளைச் செய்து வருவதாக ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
அமெரிக்கா ஒரு நியாயமான ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்கும் வரை, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியின் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எவ்வித அவசரமும் காட்டவில்லை என்றும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளுக்கான தேதியோ அல்லது இடமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என்றும் ஈரானிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

0 Comments